மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்தவகையில் இதற்கு முன்னதாக பிரமாண்ட படங்களாக வெளியான பாகுபலி, கே ஜி எஃப் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் சமீபகாலமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
அந்த வகையில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா துவங்கியுள்ளது. அந்த வகையில் மார்ச் 29ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
கடந்த முறை முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருமே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். குறிப்பாக அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசிய பேச்சு பட்டி தொட்டி எங்கும் பரவி பொன்னியின் செல்வன் படத்தை இன்னும் அதிக அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தின் இசை வெளியீட்டு போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதில் கலந்து கொள்வாரா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஜெயிலர் பட சூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தெரிகிறது.
ஒருவேளை இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.