பொதுவாக வரலாற்று கதாபாத்திரங்களில், புராண கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒவ்வொரு நடிகருக்குமே ஆர்வம் இருக்கும். அதே சமயம் மக்கள் அனைவருக்குமே, கேள்விப்பட்டு, தாங்களாகவே கற்பனை உருவம் கொடுத்து பழகிப்போன அந்த கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியுமா என்கிற ஒரு தயக்கமும் இருக்கும்.
அப்படி ஒரு தயக்கம் தான் சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சமந்தாவிடமும் ஆரம்பத்தில் இருந்ததாம். பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் உருவாகி பிரமாண்டமான படமாக வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம்.
புராண கதையான சாகுந்தலம் என்கிற இலக்கியத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி வருகிறார் நடிகை சமந்தா.
அப்படி அவர் சமீபத்தில் கூறும்போது, “ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் குணசேகர் என்னை அணுகியபோது என்னால் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது., அதனால் என்னை விட்டு விடுங்கள் என்று கூறினேன்.
ஆனால் அவர்தான் உற்சாகம் கொடுத்து இந்த படத்தில் என்னை நடிக்க வைத்தார். படம் முடிந்த பிறகு பார்த்தபோது அவரது நம்பிக்கையை நான் காப்பாற்றி உள்ளேன் என்கிற எண்ணம் எனக்கு திருப்தியை தந்துள்ளது” என்று கூறினார்
இந்த படத்தில் சகுந்தலையில் காதலன் துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதிதி மேனன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, கௌதமி, மதுபாலா, பாலிவுட் நடிகர் கபீர் பேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.