நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். கடந்த சில வருடங்களாக சசிகுமார் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வெளியான அயோத்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரத்திலும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
சசிகுமாரின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் இது அமைந்துவிட்டது. மதங்களைக் கடந்து மனிதம் வளர்க்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகி இருந்த இந்த படம் சசிகுமார் மனதிற்கு மிக நெருக்கமான படமாக அமைந்துவிட்டது.
சமீபத்தில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவின் கொண்டாடிய சசிகுமார் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு தங்க சங்கிலி அணிவித்து அவரை கௌரவித்தார்.
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் வடநாட்டு குடும்பம் ஒன்று எதிர்பாராத விதமாக வந்த இடத்தில் தங்கள் குடும்ப தலைவியை விபத்தில் இழந்து விட, அவர்கள் திக்குத்தெரியாமல் திணறி நிற்கிறது.
அந்த பெண்மணியின் உடலையும் எடுத்துக்கொண்டு அந்த மொத்த குடும்பமும் ஊர் திரும்ப, முன் பின் அறியாத சசிகுமார் எந்த அளவிற்கு போராட்டம் நடத்தி உதவுகிறார் என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் ஆக்கி இருந்தார் மந்திரமூர்த்தி. அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்து விட்டது.