தமிழில் சிவாஜி படத்திற்கு முன்பு சில படங்களில் நடிகை ஸ்ரேயா நடித்திருந்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தான் அவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். முன்னணி கதாநாயகி வரிசைக்கும் உயர்ந்தார்.

அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம் ஆகியோரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு தெலுங்கு கன்னட திரைப்படங்களில் நடித்தவர் திருமணம் செய்து கொண்ட பின்பு செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

அந்த வகையில் கன்னடத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கப்ஜா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சரியா. இதில் கதாநாயகனாக கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சந்துரு என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் சென்னை பிரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டு நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி. அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். வாய்ப்பு கிடைத்தால் அவருடன் மீண்டும் நடிக்கவும் விரும்புகிறேன். அவர் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார்” என்று கூறினார்.
கப்ஜா திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.