கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக நடிகர் ஆர்யாவுக்கு அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமைந்தது.

பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்தில் ஆர்யா மட்டுமல்ல வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கைன், மற்றும் டான்சிங் ரோஸ், சந்தோஷ் பிரதாப், கலையரசன் இவர்களை தவிர ரங்கன் வாத்தியாராக நடித்திருந்த பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சம் பெற்றனர்.

அனைவரது நடிப்பும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப இயல்பாக அமைந்து பாராட்டுக்களை பெற்றது. இப்படி வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு கடந்த வருடத்திலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

தற்போது அவர் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் கமல் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த படத்தை இயக்குவதற்கு முன்பாகவே சார்பட்டா பரம்பரை -2 படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .