பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பிறகு அதற்கு முன்பிருந்ததை விட அனுஷ்காவின் புகழ் இன்னும் அதிகமானது. அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடியது. அதனை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்த அனுஷ்கா, அப்படி நடித்த படங்களில் ஒன்றுதான் இஞ்சி இடுப்பழகி.
அந்த படத்திற்காக முன்னணி கதாநாயகர்கள் மேற்கொள்வது போல உடல் எடையை கூட்டி நடித்திருந்தார் அனுஷ்கா. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரும் அவரால் உடல் எடையை ஏற்கனவே இருந்த அளவுக்கு மீண்டும் குறைக்க முடியாமல் போனது. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும் தடைபட்டது.
அப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் நடித்த நிசப்தம் படம் கூட ஓடிடியில் தான் வெளியானது. கடைசியாக 2018ல் அவர் நடித்திருந்த பாகமதி என்கிற படம் தான் தியேட்டர்களில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டியுடன் அனுஷ்கா ஜோடியாக இணைந்து நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மகேஷ்பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்கள் சிலரின் உருவ கேலிக்கும் ஆளானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதற்கு முன் பார்த்த அனுஷ்கா எப்படி இருந்தாரோ அதேபோல அழகான முகத்துடன் களையாக காட்சி அளிக்கிறார்.
அதுமட்டுமல்ல அவர் தனது கையில் வைத்துள்ள புத்தகத்தில் ஹேப்பி சிங்கிள் என எழுதி இருக்க, அருகில் இருக்கும் நாயகனின் டி-ஷர்ட்டில் ரெடி டு மிங்கில் என்கிற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இது உருவாகி இருப்பதால், ரசிகர்களிடம் தனது இடத்தை மீண்டும் அனுஷ்கா பிடிப்பார் என நம்பலாம்.