செல்போன்கள் என்பது ஒரு காலத்தில் வரமாக வந்து இப்போது அதுவே இன்றைய தலைமுறைக்கு சாபமாக மாறிவிட்டதை அழுத்தமாக சொல்லும் படம் தான் பகாசுரன்.
கிராமத்தில் கூத்து கட்டும் கலைஞனாக இருக்கும் செல்வராகவன் நகரத்திற்கு வந்து அடுத்தடுத்து மூன்று கொலைகளை செய்கிறார். நான்காவதாக கல்வி அதிபரான ராதாரவியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். இன்னொரு பக்கம் தனது அண்ணன் மகளின் தற்கொலையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதுகுறித்து துப்புத் தொடங்க தூங்குகிறார் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நட்டி. அவரது விசாரணையில் மொபைல்களில் உள்ள நவீன செயலிகள் மூலம் ஆன்லைன் விபச்சாரத்தில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களை ஆசை காட்டியும் வலுக்கட்டாயமாகவும் ஒரு கும்பல் பயன்படுத்தி மிரட்டி பணம் சம்பாதித்து வருவதும் இதனால் தனது அண்ணன் மகள் உட்பட பல பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதும் அவருக்கு தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து இந்த கும்பலை ஆதாரத்துடன் பிடிக்க களமிறங்குகிறார் நட்டி ஒரு கட்டத்தில் அவரது தேடல் அவரை செல்வராகவன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. தன் மகளை இதுபோன்று விவகாரத்தில் பறிகொடுத்த தந்தையான செல்வராகவனும் அண்ணன் மகளை பறிகொடுத்த நட்டியும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்,, அதன் பயனாக என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்
செல்வராகவன் முதன் முறையாக முழு படத்தில் கதாநாயகனாக நடித்து நடிப்பிலும் தனது ஆளுமையை நிரூபித்துள்ளார். அதேசமயம் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள நட்டிக்கும் சம அளவு வாய்ப்பு தந்து இருவறையுமே படத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாற்றி உள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
ஒரு நடுத்தர வயது தந்தையாக இருந்தாலும் ஆக்ஷனில் பின்னி எடுக்கிறார் செல்வராகவன். அதேபோல காமெடியும் அவருக்கு இயல்பாகவே வருகிறது. நட்டியும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நேர்த்தியாக அதில் பொருந்தியுள்ளார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே மிகச் சரியான தேர்வு.
இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் தங்கள் மகள்கள் கேட்கும் உயர்ந்த செல்போன்களை வாங்கி தருகிறார்களே தவிர அவர்கள் அதன்மூலம் என்ன பிரச்சனைகளை தங்களை அறியாமலேயே இழுத்துக்கொள்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து கவனிக்க வேண்டும், அப்போதுதான் சமூக விரோதிகளின் கைகளில் அவர்கள் சிக்காமல் பாதுகாக்க முடியும்.. குறிப்பாக தங்களது பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் பற்றி பயப்படாமல் அவர்களிடம் தங்களது பிரச்சினைகளை பேச முன் வருவார்கள். அதுவே தேவையில்லாத சிக்கல்களை தவிர்த்து விடும் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி,
பகாசுரன் படத்தை பெற்றோர்களும் பிள்ளைகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று தாராளமாக சொல்லலாம்