ரேடியோ ஜாக்கி ஆக இருந்து நகைச்சுவை நடிகராக சினிமாவில் நுழைந்து அதன்பிறகு கதையின் நாயகனாக, இயக்குனராக என பல பரிமாணங்களை எடுத்தவர் ஆர்ஜே பாலாஜி. இதற்கு முன்னதாக அவர் இயக்கிய நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அவர் நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் திரைப்படமும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாள இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ஒரு விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ஆக உருவாக்கியிருந்த இந்த படத்தில் முதன்முறையாக படம் முழுவதும் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. அதேசமயம் கதையோட்டத்துடன் பார்க்கும்போது அவரது கதாபாத்திரம் கச்சிதமாக அமைந்துவிட்டது.
தற்போது இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் இதுபற்றி பேசும்போது, வழக்கமாக நடித்து வரும் பாணியிலிருந்து கொஞ்சம் மாற்றி முயற்சிக்கலாம் என இந்த படத்தில் நடித்தேன். ரசிகர்களும் என்னுடைய இந்த மாற்றத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்று கூறினார்.
இதேபோல கமர்சியல் ஆக்சன் ஹீரோவாக மாறி படங்களில் நடிப்பீர்களா என ஆர்ஜே பாலாஜியிடம் கேட்டபோது, “அதற்கு இன்னும் நாள் இருக்கிறது.. அதற்குள் சில படங்களில் நடித்து விடுகிறேன். 2030 வரை அதற்கு வாய்ப்பு இல்லை.. இந்த படத்தில் கூட நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேனே.. நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்” என்றும் கூறியிருந்தார்.