எண்பதுகளில் துவங்கி கிட்டத்தட்ட 2000 வரை தன்னுடைய படங்களில் நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு, டைரக்ஷன், தயாரிப்பு என பன்முகம் காட்டி அஷ்டவதானி என பெயர் பெற்றவர் டி.ராஜேந்தர். அவரது மகன் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான பின்பும் கூட டி.ராஜேந்தர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்த பெருமைக்குரியவர்.
அதன் பிறகு தற்போது தன்னுடைய மகனின் வளர்ச்சியை மட்டுமே பார்த்து பெருமைப்பட்டு வரும் அவர் திரையுலகையின் பின்னணியில் இயங்கும் விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகவும் தனது திரையுலக பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார். தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் இன்று வெளியிட்டார்.
இது குறித்து அவர் பேசும்போது புத்தாண்டு மலர்ந்துள்ள தை மாதம் பிறந்துள்ள இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர்ந்துள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
கிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன்.
நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.