சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன்பிறகு பல திரைப்பட நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்திவரும் ரம்யா, அவ்வப்போது சில உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஸ்டாப் வெயிட்டிங் என்கிற புத்தகத்தை எழுதி ஒரு எழுத்தாளராகவும் தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்துள்ளது இந்த நிலையில் இந்த புத்தகத்தை தற்போது நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.
கார்த்தி இந்த நிகழ்வில் பேசும்போது நானும் ரம்யாவும் பத்து வருட நண்பர்கள். சுஹாசினி மேம் சொன்னது போல ரம்யா எப்போதும் பாசிட்டிவான நபர். இன்றைய தேதியில் ஃபிட்னஸ் என்பது மிகப்பெரிய பிசினஸாக மாறிவிட்டது. பலரும் தனித்தனியாக டயட்டீஷியன், ஹெல்த் எக்ஸ்பர்ட்ஸ் & ஜிம் ட்ரெய்னர்களை வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஒட்டி மக்களை இன்ஃபுளூயன்ஸ் செய்வது எனக்கு சிறிது வருத்தமே.
நம் நாடுகளில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு நம் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். அந்த வகையில் ரம்யா இந்த புத்தகத்தில் சிறந்தவற்றை கொடுத்துள்ளார். கடந்த ஐந்து வருடத்தில் ரம்யாவின் மாற்றங்களை கவனித்தே வருகிறேன். இப்போது அவர் ‘Iron Lady’ ஆக உள்ளார்.
ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது. பலரை குறிப்பாக பெண்களையும் அவர்களது வாழ்க்கை முறையை சரியான வகையில் அவர் இந்த புத்தகத்தின் மூலம் இன்ஃபுளூயன்ஸ் செய்யவுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இந்த நிலையில் இந்த புத்தகத்தை நடிகர்கள் விஜய், சரத்குமார், துல்கர் சல்மான் இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட பல விஐபிகளுக்கும் நேரிலேயே வழங்கியுள்ளார் ரம்யா.