நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, திமிரு பட புகழ் நடிகர் விநாயகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்
ஆனால் அதையெல்லாம் விட மிகப்பெரிய ஹைலைட்டான அம்சங்கள் என்னவென்றால் கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் வில்லன் என்று சொல்லப்படுகிறது.
அதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்தார். ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான சுனிலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பல வருடங்களாக நகைச்சுவை நடிகராக வலம் வரும் சுனில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மரியாதை ராமண்ணா என்கிற படத்தில் கதாநாயகனாகவும் புரமோஷன் பெற்றார்.
கடந்த 2021ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்திலும் வில்லனாக வித்தியாசமான நடிப்பை வழங்கி இருந்தார் சுனில். இந்த நிலையில் தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் மூலமாக அவர் அடி எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.