உலக அளவில் மிக உயரிய விருதுகளாக அடையாளம் காணப்படுவது ஆஸ்கர் விருது, அதற்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருது தான். இந்த நிலையில் தற்போது ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து அதிரடியாக நடனமாடிய அந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதும் தென்னிந்திய திரை உலக மட்டுமல்லாது மொத்த இந்தியாவே ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு, குறிப்பாக இசையமைப்பாளர் மரகதமணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து தெலுங்கு திரைகளிலேயே பயணித்து வரும் மரகதமணி 80 90களில் எம்எம் கீரவாணி என்கிற பெயரில் தமிழிலும் இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்தான்.

தற்போது கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகி வரும் ஜென்டில்மேன் 2 படத்திலும் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் சந்திரமுகி 2 படத்திலும் இசையமைப்பதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார் மரகதமணி.

இந்த நிலையில் சந்திரமுகி 2 பட குழுவினர் எம் எம் கீரவாணி என்கிற மரகதமணிக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.