சூப்பர்ஸ்டார் ரஜினி என்கிற பட்டம் இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் ஒருவருக்கு சொந்தமானது என்றாலும் அந்தந்த மொழி திரை உலகங்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் முன்னணி ஹீரோக்களும் அதேபோலத்தான் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் மலையாள திரையுலகில் மோகன்லால் சூப்பர் ஸ்டாராக கருதப்படுகிறார்.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மோகன்லால். இதுவரை கடந்த சில தினங்களாக யூகமாக சொல்லப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது படத்தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் கிளம்பிச் சென்றார் தற்போது மோகன்லாலும் இந்த படப்பிடிப்பில் இணைந்து கொண்டு நடித்து வருகிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தளபதி என்கிற படத்தில் இணைந்து நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த இருவரின் கூட்டணிக்கு அப்போதே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இன்றும் அந்த படம் இருவரும் நடித்த மாஸ் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்தவகையில் நடிகர் மோகன்லால் தமிழில் கமலுடன் இணைந்து நடித்துவிட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்காதது இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு குறையாக இருந்தது. அந்த குறை தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் நீங்கிவிட்டது என இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.