சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் கிடக்க, அது அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சஞ்சனா (வெலோனி) என்பதும் அவள் கொல்லப்பட்டு இறந்து போனதும் தெரிய வருகிறது. ஆங்கிலோ இந்தியனான சஞ்சனாவின் அம்மா லைலா, அந்தப்பகுதியில் ஒரு தங்கும் விடுதி நடத்தி வருகிறார். அதே விடுதியில் தங்கியிருந்த வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்ளும்படி தனது மகளை வற்புறுத்தி வந்தார் லைலா. ஆனால் அதற்கு சம்மதிக்காத சஞ்சனா சுதந்திரத்தை விரும்புகிறார்.

இந்த நிலையில் திடீரென சஞ்சனாவின் மரணம் பலர் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் போலீஸ் அதிகாரி விவேக் பிரசன்னா இந்த வழக்கில் சஞ்சனாவை திருமணம் செய்துகொள்ள இருந்த வெங்கடேஷை சந்தேகப்படுகிறார். ஆனால் அவரோ தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட அவர்தான் கொலைகாரர் என முடிவுசெய்து வஹகு முடிக்கப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கை விசாரிக்க புதிதாக நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரியான எஸ்ஜே சூர்யா இதில் கிடைக்கும் சின்னச்சின்ன தடயங்களை வைத்து இந்த வழக்கில் முன்னேறுகிறார். சஞ்சனாவை காதலிப்பதாக பின்னால் சுற்றிய இளைஞன், லைலாவின் விடுதியில் தங்கி சென்ற எழுத்தாளர் நாசர், காட்டு விலங்குகளை அடித்து விற்கும் மிருக குணம் கொண்ட மூன்று சகோதரர்கள் என சூழலின் காரணமாக ஒவ்வொருவரின் மீதும் சந்தேகப்படும் எஸ் ஜே சூர்யாவு, ஒரு கட்டத்தில் இவர்கள் யாருமே சஞ்சனாவை கொன்றிருக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகிறார்.

திடீரென எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு க்ளூ மூலம் இந்த வழக்கில் முன்னேறிச் செல்லும் எஸ்ஜே சூர்யா இறுதியில் உண்மை குற்றவாளியை நெருங்குகிறார். நாம் முற்றிலும் எதிர்பாராத அந்த நபர் யார் என தெரிய வரும்போது மிகப்பெரிய அதிர்ச்சி நமக்கு பரிசாக கிடைக்கிறது.

யார் அந்த குற்றவாளி ? எஸ்ஜே சூர்யா அவரை நெருங்கியது எப்படி? என்பது எட்டு பாகங்கள் கொண்ட இந்த வெப்சீரிஸின் 8ஆம் பாகத்தில் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.
320 நிமிடங்கள், அதாவது கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம், எட்டு பாகங்களாக ஓடக்கூடிய இந்த வெப்சீரிஸ், எந்த இடத்திலும் படம் பார்க்கும் ரசிகர்களை போரடிக்க வில்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுவோம். அந்த அளவிற்கு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக இந்த வெப் சீரிசை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.

துப்பறியும் போலீஸ் அதிகாரியாக அந்த எஸ் ஐ கதாபாத்திரத்தில் மிகச்சரியாக தன்னை பொருத்திக் கொண்டு உள்ளார் எஸ்ஜே சூர்யா. கொல்லப்பட்ட சஞ்சனாவுக்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் மெனக்கெடும் காட்சிகளும் ஒரு பக்கம் உயரதிகாரி அந்த வழக்கை கைவிட மிகுந்த அழுத்தம் கொடுத்தும், வீட்டில் மனைவியே தன்னை தவறாக புரிந்து கொண்டு கோபப்பட்டும் கூட, நிஜ குற்றவாளியை விட்டுவிடக் கூடாது என மொத்த எபிசோடுகள் முழுக்க துடிப்புமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.

அவரைத்தவிர அல்லது அவரைப்போல நம்மை இந்த மொத்த பாகங்களிலும் கவனம் ஈர்க்கும் அடுத்த நபர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா. விதவிதமான முகபாவங்களாளும் க்யூட்டான சிரிப்புகளாளும் நம் மனதை அள்ளுகிறார். அதேசமயம் தனது சுதந்திரத்திற்காக தனது அம்மாவிடம் வாதாடும் காட்சிகள் எல்லாம் ஒருபக்கம் நமக்கு நியாயமாகவே தோன்றுகின்றன. அந்த அளவிற்கு அவரது நடிப்பும் கதாபாத்திரமும் அழகாக அமைந்துள்ளன.

சஞ்சனாவின் அம்மாவாக லைலா.. கணவன் இல்லாத நிலையில் தனது மகளை வளர்க்க அவர் காட்டும் கண்டிப்பு ஓவர் டோஸாக போவதை கூட உணராதா தாயாக, அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.. மகள் எங்கே இளம்வயதில் தவறான பாதையில் போய் விடுவாளோ என்று அவர் கோபப்படுவது நியாயம் தான். ஆனால் எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல் தனக்கு உதவியாக இருக்கிறானே என்பதற்காக தனது லாட்ஜில் தங்கியிருந்த ஒருவரைத்தான் சஞ்சனா திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தும்போது அவர் கதாபாத்திரம் மீது அந்த கோபம் திரும்பி விடுகிறது. அந்த அளவிற்கு இயல்பாக நடித்துள்ளார் லைலா.

இந்த வழக்கில் துவக்கத்தில் இருந்து கடைசி வரை எஸ்ஜே சூர்யாவுக்கு உதவியாக நெல்லை வட்டார வழக்கில் சரளமாகப் பேசிக் கொண்டு உடன் பயணிக்கும் இன்னொரு போலீஸ் அதிகாரியான விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரம் இந்த வெப்சீரிஸ் பார்க்கும் அனைவருக்குமே பிடிக்கும் வகையில் கலகலப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமானவர் என்று இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்.

எழுத்தாளராக நாசருக்கு இன்னுமொரு அருமையான கதாபாத்திரம் அவரது திரையுலக பயணத்தில் கிடைத்துள்ளது. அவரிடமிருந்து சில திடுக்கிடும் திருப்பங்கள் இந்த வழக்கிற்கு கிடைப்பது எதிர்பாராத ஒன்று.
இவர்கள் தவிர இன்னும் சில போலீஸ் உயர் அதிகாரிகள், காட்டில் வசிக்கும் அந்த மூன்று சகோதரர்கள், அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் கொளப்புள்ளி லீலா, ஈஸ்ஜ்ஜே சூர்யாவின் மனைவியாக வரும் ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

இந்த வெப்சீரிஸில் எந்த கதாபாத்திரம் சிறப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைவருமே இந்த கதையை நகர்த்த தேவையாக இருந்துள்ளனர். உதவியாகவும் இருந்துள்ளனர். எட்டு எபிசோடுகள் என்றாலும் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்த, கூடவே இசையமைப்பாளர் சைமன் கே கிங்கின் பின்னணி இசை மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டி, உருக வைக்க வேண்டிய இடங்களில் உருக வைத்துள்ளது. பின்னணி இசை இந்த வெப்சீரிஸுக்கு ரொம்பவே பக்கபலம்.
கதை ஒவ்வொருவரது கோணத்திலும் மாறிமாறி சென்று வருவதால் சில நேரங்களில் கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்பது போன்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் பின்னர் கதை பயணிக்கும்போது ஓரளவிற்கு தெளிவும் கிடைத்துவிடுகிறது.
மொத்தத்தில் இந்த வெப்சீரிஸ் முதல் பாகத்தை பார்க்கும் ரசிகர்களை, எட்டாம் பாகம் வரை தொடர்ந்து ஒரேநாளில் பார்க்கவைக்கும் விதமாக தனது வித்தையை பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.