கடந்த 2002-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் பாபா. இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்கிற தகவல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான நாளிலிருந்தே, ரசிகர்கள், மீடியா மட்டுமல்லாது விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பும் ஆரவாரமும் எழுந்துள்ளது.
இந்தப்படம் இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றதும், சில சர்ச்சைகளில் சிக்கியதும் என இந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய் விட்ட வருத்தம் பலருக்கும் உண்டு.
இந்தநிலையில் மீண்டும் பாபா படத்திற்கான ஆரவாரம் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற செய்தியும் புதிய உற்சாக அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தின் டிஐ மற்றும் மிக்சிங் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன இந்த படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் தனது பங்களிப்பால் இதில் மேலும் ஏதாவது மேம்படுத்த முடியுமா என்று பார்ப்பதற்காக ஒரு முறை இந்த படத்தை தான் பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்காக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ள சில புதிய காட்சிகளுக்காக சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டப்பிங்கும் பேசியுள்ளார்.
பாபா படத்தின் ரிலீசுக்கு கிடைத்துவரும் மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் தங்களது அளவற்ற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.