முன்புதான் சினிமா இயக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் வெப்சீரிஸ் இயக்கி திருப்திப்பட்டுக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்று திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ்களும் விஸ்வரூபமெடுத்து உள்ளன. குறிப்பாக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சினிமாவுக்கு இணையாக வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தொடர்ந்து கதாநாயகனாகவும் மாநாடு படத்தில் ஸ்டைலிஷான மிரட்டலான வில்லனாகவும் நடித்து நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே செல்லும் எஸ்ஜே சூர்யாவும் முதன்முறையாக வதந்தி என்கிறார் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கினாரே ஆண்ட்ரூ லூயிஸ், அவர்தான் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் வாலி படத்திலிருந்து நியூ படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதுதான்.

தனது குருநாதரை ஹீரோவாக வைத்து வெப்சீரிஸ் இயக்கியுள்ளார் என்பது ஆச்சரியம்தான். இந்த வெப்சீரிஸை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதனை அமேசான் பிரைம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பு செய்கிறது/

இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஸ்ஜே சூர்யா பேசும்போது, “திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. இந்த வெப்சீரிஸுக்கு. டேக் லைனாகவே இணைத்துக் கொள்ளலாம்.

என்னுடைய சிஷ்யரின் டைரக்ஷனில் நடித்திருப்பது, அதன் மூலம் தடைகளை உடைத்து இந்த உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்கிற என்னுடைய ஆசை நிறைவேறியுள்ளது” என்று பெருமிதத்துடன் கூறினார் எஸ்ஜே சூர்யா.