கழுகு படம் மூலம் தனது வித்தியாசமான கதை உருவாக்கத்தால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் இயக்குனர் சத்யசிவா. இந்த நிலையில் தற்போது சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஒரு சாதாரண மனிதன் எப்போது மிருகமாய் மாறுகிறான் என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் சத்யசிவா. இந்தப்படத்தில் சசிகுமாருக்கு ஒரு மிகப்பெரிய சண்டை காட்சி ஒன்று உள்ளது. இந்த சண்டைக்காட்சியை ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இயக்குனர் சூழ்நிலை காரணமாக ஒரே நாளில் இதை படமாக்கி சாதித்துள்ளார்.
அதற்கு காரணம் என்ன என இயக்குனர் சத்யசிவா கூறும்போது, “இந்த படத்தின் சண்டைக்காட்சி பெயிண்ட் தயாரிக்கும் கம்பெனியில் நடப்பது போன்று எடுக்கப்பட்டது. அப்போது சண்டை கலைஞர் ஒருவர் சசிகுமாரின் மீது பெயிண்ட் ஊற்றுவார். அதைத் தொடர்ந்து சண்டை காட்சிகள் நடந்து முடியும். இப்படி ஹீரோ மீது பெயிண்டிங் ஊற்றி அதை வைத்து சண்டைக்காட்சியை தொடர்ந்து பல நாட்கள் படமாக்கினால் அதில் நடிக்கும் எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டு விடும்.
அதனால் இதை ஒரே நாளில் படமாக்கி முடித்து விட்டால் தான் அவருக்கும் சிரமமின்றி இருக்கும் என்பதை மனதில் வைத்து ஒரே நாளில் படமாக்கிய முடித்தோம். அந்த சண்டைக்காட்சியும் சிறப்பாக வந்துள்ளது” என்று கூறியதுடன் அந்த காட்சியை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையிட்டும் காட்டினார் இயக்குனர் சத்யசிவா.