V4UMEDIA
HomeNewsKollywoodசாமானியன் ராமராஜனுக்கு உயிர்கொடுக்கும் இளையராஜா

சாமானியன் ராமராஜனுக்கு உயிர்கொடுக்கும் இளையராஜா

கடந்த 80களில் கிராமத்து நாயகனாக மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் ராமராஜன். கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒவ்வொரு படத்திலும் நடித்து வந்த ராமராஜன் கால ஓட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியல் பக்கம் சென்றார்.

இடையில் அவரை தேடி நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்தாலும் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கொள்கையுடன் இருந்து வந்ததால் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ராமராஜன்.

இவருடன் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தை இயக்கிய ராகேஷ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்கிற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக படக்குழுவினருடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் ராமராஜன்.

இதுபற்றி வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் இந்தப்படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,  நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநர் R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, “’சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான்.

காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த  படம் அமைந்துள்ளது.

 தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

ராமராஜனின் பல வெற்றிப்படங்களை இயக்கிய அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார்.  கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின்  அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும்” என்றார்.

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

‘சாமானியன்’ படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Most Popular

Recent Comments