நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக தசை நார் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரே சமீபத்தில் வேதனையுடன் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். இருந்தாலும் அடுத்ததாக அவரது நடிப்பில் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையிலும் அவர் இப்படி ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் இந்த யசோதா திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த்திருக்கின்றனர். இசையமைப்பாளர் மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமந்தா கூறும்போது, “யசோதா போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக்கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதை.
புராண கால யசோதாவையும் இந்த ‘யசோதா’வையும் ஒப்பிட்டீர்கள் என்றால் இரண்டு பேரும் அம்மா, பெண் என்பதைத் தாண்டி இரண்டு பேரும் நிறைய பேரை காப்பாற்றுவார்கள். கிருஷ்ணரை வளர்த்தத் யசோதா தாய்தான். இந்தப் படம் பார்த்ததும் நான் சொல்வதை அனைவரும் நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள் என்கிறார்.
ட்ரைலர் பார்த்தபோது வாடகைத்தாய் முறை பற்றி மட்டும் இல்லாமல், அதில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது. அது பற்றி சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டால் வாடகைத்தாய் விஷயம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. இது குறித்து ஒரு வலுவான கருத்து எனக்கு கிடையாது.
நான் புரிந்து வைத்துள்ள வரைக்கும் பெற்றோர் ஆக விரும்பும் அளவுக்கு அது ஒரு தீர்வு, நம்பிக்கைநான் இப்போது படம் குறித்து எதாவது தெரியப்படுத்தினால் அது படம் பார்க்கும் மொத்த அனுபவத்தையும் கெடுத்து விடும். இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. என்று கூறி சஸ்பென்ஸ் உடன் முடிக்கிறார் சமந்தா