பொதுவாகவே நடிகர் பார்த்திபன் தான் கலந்து கொள்ளும் எல்லா விழாக்களிலும் மைய ஈர்ப்பு நபராக எப்போதும் இருப்பார். காரணம் அவரது கவிதை நயமான பேச்சு, புன்முறுவலை வரவழைக்கும் நகைச்சுவை கலந்த பேச்சு எல்லாமே விழா அரங்கத்தை விலா நோக சிரிக்க வைக்கும் பல படங்களுக்கு அவரது பேச்சு மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டியாக கூட அமைந்து விடுவது உண்டு.
இன்னும் கொஞ்ச நேரம் அவரது பேச்சைக் கேட்க மாட்டோமா என்று பலருக்கும் தோன்றும். அப்படிப்பட்ட பார்த்திபன் இன்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் பேசும்போது மிகக்குறைந்த நேரமே பேசினார்.
அப்படி அவர் பேசும்போது இனிவரும் இது போன்ற விழாக்களில் தான் குறைவாகவே பேசுவேன் என்பதை தனது வார்த்தைகளில் மறைமுகமாக உணர்த்தியதையும் பார்க்க முடிந்தது.
அவர் பேசியதில் இருந்து, விழாக்களில் தான் பேசும்போது சில நேரம் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்கள் சிலர் அந்த பேச்சால் வருத்தப்படும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதனால் சிலசமயம் நல்ல நட்பை இழக்க வேண்டிய தர்ம சங்கடமும் ஏற்படுகிறது. அதனால் இனி தான் உண்டு தன் வேலையுண்டு என ரத்தின சுருக்கமாக பேசப்போவதாக அவர் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
இதற்கு முன்னதாக பொன்னியின் செல்வன் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவரது பேச்சு வேறு விதமாக அர்த்தம் கொள்ளப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.