சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்துடன் அலங்கரிக்கப்பட்ட நீர் டேங்கர்களில் குடிநீரை இலவசமாக வழங்க நகரம் முழுவதும் வலம் வருகின்றனர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்.
தமிழகம் மற்றும் அதன் தலைநகரான சென்னை, குறிப்பாக, தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், ரஜினிகாந்தின் படத்துடன் கூடிய டேங்கர்கள் மூலம் தண்ணீரை வழங்குகின்றனர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றமான ரஜினி மக்கள் மன்றம் (ஆர்.எம்.எம்) உறுப்பினர்களின் இந்த முயற்சி, பல மாதங்களாக நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை, நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு குடிநீரை இலவசமாக வழங்குவதாகும்.
“நாங்கள் இதை ஒரு சமூக சேவையாக செய்கிறோம். நீர் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், அந்த பகுதிகளில், 10 நாட்களுக்கு ஒரு முறை கூட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் ஒரு கூட்டம் நடத்தி அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு நாளும், இரண்டு லாரிகள் மூலம் இந்த பகுதிகளுக்கு 48,000 லிட்டர் தண்ணீரை வழங்குகிறோம், ”என்று ரஜினி மக்கள் மன்றத்தின் மத்திய சென்னை தொகுதி செயலாளர் ஏ.வி.கே.ராஜா கூறினார்.
இந்த முயற்சியை ரஜினிகாந்த் அவர்களே ஏற்றுக் கொண்டார் என்றும் அவர் எங்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கிறார் என்றும் ராஜா கூறினார். “ரஜினி ஐயா எங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார், எங்களின் அன்றாட நடவடிக்கையை நாங்கள் சமூக வலைதளத்தின் மூலம் பதிவிடுகிறோம்” என்று அவர் கூறினார்.
இது தன்னார்வ சேவை என்றும் அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும் மதுரவோயல் மேற்கு பகுதியின் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சுந்தர பாபு தெரிவித்தார். மேலும், “நாங்கள் மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இதைச் செய்கிறோம். சென்னெரிக்குப்பத்திலிருந்து, அனைத்து வார்டுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் கொண்டு வருகிறோம். நாங்கள் ஒரு டேங்கருக்கு ரூ .6,000 செலுத்துகிறோம், ஒவ்வொரு நாளும் 12,000 லிட்டர் தண்ணீரைக் கொண்டு வருகிறோம், ”என்று பாபு கூறினார்.
சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கும் பணி குறித்து ஆர்.எம்.எம் தொழிலாளர்கள் உதவி வழங்கியுள்ளனர். ஆர்.எம்.எம் இன் வேளாண் பிரிவு ‘சிட்லபாக்கம் ரைசிங் குழுமத்தின்’ தன்னார்வலர்களுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட, உறுப்பினர்கள் ஆலந்தூர் ஏரிக்கு அருகே ஒரு துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர், அங்கு ஐந்து டன் குப்பையை சுத்தம் செய்தனர்.
சிட்லபாக்கத்தில் நடந்த மெகா கிளீன்-அப் குறித்து பேசிய தென் சென்னை தொகுதியின் ஆர்.எம்.எம் செயலாளர் ரவிச்சந்திரன் “நல்லதே நினை , நல்லதே பேசு, நல்லதே செய், இது எங்கள் தலைவரின் மந்திரம். ரஜினி ஐயா எப்போதும் நீர் நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் நதி இணைக்கும் திட்டத்தை நாட்டில் செயல்படுத்த விரும்புகிறார். அவரை பின்பற்றி அவரது வழியில் நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம். எங்களை இங்கு அழைத்த சிட்லபாக்கம் ஏரியின் தொண்டர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறினார்.
வேலூரில், ஆர்.எம்.எம் உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 25 லிட்டர் கேன் குடிநீரை விநியோகித்து வருகின்றனர். உறுப்பினர்கள், வயதானவர்களைக் கொண்ட வீடுகளுக்கு வீடு வீடாக சப்ளை செய்கிறார்கள். இது தவிர, நீர் தொட்டிகளை வைக்கவும் உறுப்பினர்கள் உதவுகிறார்கள்.
ரஜினி மக்கள் மன்றத்தின் நடவடிக்கைகள் மக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் அன்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. சிபிஐயின் ஆர் நல்லக்கண்ணு சிட்லபாக்கம் ஏரிக்கு வருகை தந்து ஆர்எம்எம் உறுப்பினர்களின் முயற்சிகளுக்கு பாராட்டினார்.