தமிழில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் நடிகை லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் தற்போது தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவருடைய நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் குட்டப்பா என்கிற படம் வெளியானது. இந்தநிலையில் அன்னபூரணி என்கிற படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் லாஸ்லியா.
இன்னொரு கதாநாயகியாக ஜெய்பீம் படத்தில் செங்கனியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது நடிகர்கள் ஜெயம் ரவி, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
“எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்” என இதை வெளியிட்ட ஜெயம் ரவி கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்த ஹரிகிருஷ்ணன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
குடும்பத்தில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அடக்குமுறைகள் குறித்து கருத்து கூறும் விதமாக இல்லாமல் அனைவரையும் கவரும் விதமாக இந்தப்படம் உருவாகி வருகிறது.
இந்த படம் பற்றி நாயகிகளில் ஒருவரான லிஜோமோல் கூறும்போது, “சொந்த சோகங்களை ஒரு பெண் எப்போது எதிர்க்க துணிகிறாளோ அப்போதுதான் அவள் அனைத்துப் பெண்களுக்குமான உரிமையைப் பேசத் தொடங்குகிறாள்” என்று கூறியுள்ளார்.
96 படத்திற்கு இசையமைத்து கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு திரில்லர் டிராமாவாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார் மேலும் அவரே இந்த படத்தின் வசனங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..