தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வாரிசு. முதன்முதலாக இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் ஒரு புதிய பாதையில் விஜய் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா என்கிற உணர்வு பூர்வமான படத்தை கொடுத்த இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்கி வருவதால் நிச்சயம் இந்த படத்தில் விஜய்யை இன்னொரு புதிய பரிமாணத்தில் பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நிறையவே இருக்கிறது.

அதற்கு தீனி போடும் விதமாக அவ்வப்போது வெளியாகும் இந்த படத்தின் புகைப்படங்களும் போஸ்டர்களும் அதை உறுதி செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கல் ரிலீசாக வெளியாகிறது என்பதை உறுதிப்படுத்தி அதேசமயம் தீபாவளி பரிசாக விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிலும் படத்தில் முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்று இருப்பதை இந்த போஸ்டர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. வாரிசின் வரவுக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.