இந்த வருடத்தில் கோப்ரா, பொன்னியின் செல்வன் என விக்ரம் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவரது திரையுலக பயணத்தில் புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. குறிப்பாக கோப்ரா படத்தைவிட பொன்னியின் செல்வன் படம் விக்ரமுக்கு மீண்டும் கை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
இதைத்தொடர்ந்து அவர் இயக்குனர் பா.ரஞ்சித் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கு தங்கலான் என டைட்டில் வைக்கப்பட்டு தீபாவளியை முன்னிட்டு அதன் போஸ்டரும் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில் விக்ரம் பார்ப்பதற்கே முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பிதாமகன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் விக்ரம் மீண்டும் ஒரு பரிசோதனை முயற்சியிலான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்பது போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது.
மேலும் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்து பசுபதி இந்தப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.