பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதைத்தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல படங்களில் நடித்த பிரியாமணி திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பிலிருந்து கொஞ்சம் ஒதுங்கினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த விராட பருவம் என்கிற படம் வெளியானது. இந்தியில் மைதான் என்கிற படத்திலும் பிரியாமணி நடித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகும் விதமாக DR56 என்கிற படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார் பிரியாமணி.
“இது அறிவியல் சார்ந்த க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது தற்போது சமூகத்தில் நிலவி வரும் உண்மை சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
இந்த கதையை சொல்லும்போது பிரியாமணி மிகவும் பிரம்மிப்புடன் கேட்டார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக நேர்த்தியாக, சிபிஐ அதிகாரியாக தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார்.
இந்தப்படம் கன்னடத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவில்லை. கன்னடத்தில் எடுக்கும்போதே தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்தது சவாலாக இருந்தது” என்று கூறியுள்ளார் இயக்குனர் ராஜேஷ்..