கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த படம் உப்பென்னா. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கிரீத்தி ஷெட்டி. இந்த முதல் படத்திலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அவர் தற்போது தமிழில் சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்தநிலையில் மலையாளத் திரையுலகிலும் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் கிரீத்தி ஷெட்டி. டொவினோ தாமஸுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் இந்த படத்திற்கு அஜயண்டே ரண்டம் மோசனம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் உருவானாலும் கூட இதன் படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி பகுதியில் தான் நடைபெற இருக்கிறது. தற்போது அங்கேயே இந்த படத்திற்கான துவக்க விழா பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தை ஜித்தின் லால் என்கிற இயக்குனர் இயக்குகிறார்.
இந்த படத்திண் கதை மூன்று விதமான காலகட்டத்தில் நடைபெற உள்ளதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். கிரீத்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாள நடிகையான சுரபி லட்சுமி ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.