கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய விருது வழங்கப்பட்ட நிகழ்வில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த ஒரு நபர் என்றால் அது கேரள தமிழக எல்லையில் உள்ள அட்டப்பாடி கிராமத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா ஜனாதிபதி அவர்களின் கையால் விருது பெற்றது தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் பிஜூமேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷயும் என்கிற படத்தில் இடம்பெற்ற கலக்காத்த சந்திரமேரா என்ற பாடலை பாடி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தவர் தான் இந்த நஞ்சம்மா.
இந்த பாடலை பாடியதற்காகத்தான் அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தநிலையில் தமிழிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள நஞ்சம்மா சீன் நம்பர் 2 என்கிற படத்தில் என் சேவல் என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலை நஞ்சமாவுடன் இணைந்து பின்னணி பாடகர் வேல்முருகனும் பாடியுள்ளது இதற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. மலையாளத்தில் ஆதாம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு ஜி கே வி இசையமைக்க சிவப்பிரகாசம் என்பவர் பாடலை எழுதியுள்ளார். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி முழுப்பாடலையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்தப்படத்தில் கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன் மற்றும் ராகந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.