எண்பதுகளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என பலரும் முன்னணியில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் பாணியில் இருந்து விலகி இரண்டு ஹீரோக்கள் மட்டும் தமிழ் சினிமாவில் ஆச்சரியப்படத்தக்க வெற்றிகளையும் ரசிகர்கள் செல்வாக்கையும் பெற்றனர். அவர்களில் ஒருவர் ராமராஜன்.. இன்னொருவர் மோகன்..

இருவரும் தனித்தனி பாணியை கடைபிடித்தனர். குறிப்பாக நடிகர் மோகன் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி குடும்பத்துடன் வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். தொடர்ந்து பல சில்வர் ஜூப்ளி படங்களில் நடித்ததால் சில்வர் ஜூப்ளி ஹீரோ என்று கூட அப்போது அவரை அழைத்தார்கள்.

இந்த நிலையில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் வரும் ஒரு கட்டத்தில் ஏற்படும் தொய்வு போல மோகனுக்கும் சரிவு ஏற்பட்டது. பல ஹீரோக்கள் தங்களை குணச்சித்திர நடிகராக, வில்லனாக மாற்றிக்கொண்டு திரையுலக பயணத்தை தொடர ஆரம்பித்தார்கள். ஆனால் மோகன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக நின்றதால் திரையுலகில் அவருக்கு பல வருட இடைவெளி ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீவிஜய் என்பவர் இயக்கத்தில் ஹரா என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் மோகன். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் மோகன் திரையுலகில் நுழைந்து 45 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்..

இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ஹரா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.