புதுமுகங்கள் நடிப்பில் சுந்தரவடிவேல் என்பவர் இயக்கியுள்ள படம் ரீ. பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ள, ஒரு சைக்கோ திரில்லராக உருவாகி இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கும் பேய் படங்களுக்கும் தான் மதிப்பு என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார் .

இதுபற்றி அவர் பேசும்போது, “இன்று ‘தியேட்டர் ஆடியன்ஸ்’ என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை சினிமாவுக்கு ஒரு சாபம். சினிமா எடுப்பதே தியேட்டர்களுக்கு வருவதற்குத் தானே? அது என்ன தியேட்டர் ஆடியன்ஸ்? அவர்கள் கோணத்தில் அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சினிமா மீது ஆர்வம் உள்ள சினிமாவை நம்பி இருக்கும் என் போன்றவர்களுக்கு அது அவலமாகத் தெரிகிறது. வருத்தப்பட வைக்கிறது.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். சின்ன படங்கள் ஓடுவதில்லை. சிறிய படங்களுக்கு, சிறிய முதலீட்டு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. கேட்டால் மக்கள் வரவில்லை என்கிறார்கள்.

பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இந்த சினிமாவை காப்பாற்றுபவர்கள், பெரிய ஹீரோக்களும் பேய்களும் தான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் சினிமாவில் மதிப்பு இருக்கிறது. இன்று மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தால் வருகிறார்கள். அல்லது பாகுபலி, கேஜிஎப் போன்ற பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் என்றால் வருகிறார்கள். சிறிய படங்களுக்கு வருவதில்லை. அதிலும் ஒரு சின்ன ஆறுதல். சிறிய படங்களில் பேய்ப் படங்கள் ஓடுகின்றன.

அதற்கு மட்டும் திரையரங்குகள் கிடைக்கின்றன. இப்படியான பேய்ப்படங்களுக்கு பிற மொழிகளில் விற்பனை மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த ‘ரீ ‘படம் ஒரு பேய்ப் படமாக உருவாகி இருக்கிறது.

இப்படி இன்றைய சூழலையும் மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட அந்த ஒரு நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை சுந்தரவடிவேல் எடுத்துள்ளார். மக்களைத் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் இருக்கிறது. எனவே இதை ஒரு வேண்டுகோளாக நான் இந்த அரசிடம் வைக்கிறேன்”. என்றார் பேரரசு















