தமிழ் சினிமாவில் பாரம்பரிய விளையாட்டான கபடி முதற்கொண்டு ஹைடெக் விளையாட்டான கிரிக்கெட் வரை பல விளையாட்டுகளை மையப்படுத்தி நிறைய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள ஸ்னூக்கர் விளையாட்டு பற்றி தென்னிந்திய அளவில் இதுவரை எந்த ஒரு படமும் வெளியானது. இல்லை அந்த குறையை போக்கும் விதமாக தற்போது ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி சஞ்சீவன் என்கிற படம் உருவாகியுள்ளது.

பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் மணி சேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்த விளையாட்டை மையப்படுத்தி படம் இயக்க வேண்டும் என ஏன் தோன்றியது என்பது குறித்து இயக்குனர் மணி சேகர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.

படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது. ஆனால் சில காரணங்களால் செயற்கை மழையை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிதுநேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேப்போன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார்