ஒரு காலத்தில் மக்கள் நாயகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் அழைக்கப்பட்டவர் ராமராஜன். டைரக்சன் ஆசையில் சினிமாவில் நுழைந்தவர் அதிர்ஷ்டவசமாக நடிகராக மாறி கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வெள்ளிவிழா கண்டன இதனால் வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட ராமராஜன் தொடர்ந்து கிராமத்து கதைகளாக, குடும்ப உறவின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமான படங்களில் நடித்தார். ராமராஜன் தான் இதுவரை நடித்த 44 படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்
இடையில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தபோது கூட, அதை மறுத்துவிட்டு தனது கொள்கையில் இப்போது வரை உறுதியாக உள்ளார். இந்த நிலையில் ராமராஜன் சாமானியன் என்கிற கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்பட்டுள்ளது. ராகேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இன்று படத்தின் அனைத்து மொழி போஸ்டர்களும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராகேஷ் என்பவர் இயக்கும் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் தயாரிக்கிறார். மேதை என்கிற படத்தை தொடர்ந்து பல வருட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் இந்த படத்தின் மூலம் சாமானியனாக மீண்டு(ம்) வருகிறார் என்று கூட சொல்லலாம்.