தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக இதற்கு முன்னதாக வெளியான தனுஷின் 4 படங்களும் ஓடிடி தளத்தில் வெளியானதுடன் ரசிகர்களின் வரவேற்பை பெறவும் தவறின.
இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி தனுஷின் மார்க்கெட்டை மீண்டும் ஸ்டெடியாக தூக்கி நிறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் நானே வருவேன் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
தனுஷின் திரையுலக பயணத்தை துவங்கி வைத்த அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
இவர்களது ஆதர்ச இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறி இருக்கிறது. இந்த படத்தின் இந்த படத்தின் டீசர் செப்டம்பர் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்து தனுஷ் சூசகமாக ஒரு பதிவிட்டுள்ளார்.
“ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம்.. இன்னொரு ராஜா கெட்டவராம்” என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தனுஷ் இப்படி குறிப்பிட்டிருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.