கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் இரண்டு அலைகள் ஏற்படுத்திய தாக்கம் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். சொல்லப்போனால் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி கமல், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படமும் வெளியான ஆண்டாக இந்த 2022 அமைந்துவிட்டது.
அது மட்டுமல்ல ஒரு சில நடிகர்களின் படங்கள் மாதம் ஒன்று என்கிற வகையில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான நிகழ்வுகளும் நடந்துள்ளன. குறிப்பாக அருள்நிதி மற்றும் அருண்விஜய் ஆகியோரின் படங்கள் கடந்த மூன்று மாதங்களாக மாதத்திற்கு ஒன்று என வெளியாகி வரவேற்பையும் பெற்றுள்ளன
இதில் அருள்நிதி நடித்த டி பிளாக், தேஜாவு, சமீபத்தில் வெளியான டைரி என மூன்று படங்களும் நேரடியாகவே தியேட்டர்களில் வெளியாகின. மூன்று படங்களுக்கும் ஒவ்வொரு மாத இடைவெளி தான் இருந்தாலும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் வழக்கம்போல தங்களது ஆதரவை தந்துள்ளனர்.
இதுகுறித்து ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தனது படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தனது அண்ணன் உதயநிதிக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அருள்நிதி.
கூடவே இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியானது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல.. எதேச்சையாக நடந்ததுதான். ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பும் வெவ்வேறு சமயத்தில் துவங்கினாலும் கொரோனா காலகட்டம் காரணமாக தற்போது ஒவ்வொன்றாக குறுகிய காலத்தில் வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் ரசிகர்கள் இந்த மூன்று படங்களுக்கும் எனக்கும் அளித்த வரவேற்பிற்கு மிகுந்த நன்றி என்று கூறியுள்ளார் அருள்நிதி.