கடந்த 2019-ல் வெளியான ஜீவி படம் அதன் வித்தியாசமான கதை திரைக்கதைக்காக கவனிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக முக்கோண விதி, தொடர்பியல், மையப்புள்ளி என அறிவியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இதன் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்தன.
இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாம் பாகமும் முதல் பாகத்தை போல விறுவிறுப்பாக இருக்கிறதா..? பார்க்கலாம்.

முதல் பாகம் பார்க்கதவர்களுகாக அல்லது பார்த்தாலும் மறந்திருப்பார்களே அவர்களுக்காக ஜீவி முதல் பாகத்தில் சில காட்சிகளை காண்பித்து அதை ரீவைண்ட் செய்தபடி தொடங்குகிறது கதை.

தொடர்பியல் விதியால் தனக்கு இனியும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக ஹவுஸ் ஓனர் ரோகிணியின் மகளையே திருமணம் முடிந்து மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் வெற்றி. ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர் கார் வாங்குகிறார். முதல் பாகத்தில் கோபித்துக்கொண்டு போன நண்பன் கருணாகரனை அழைத்துவந்து டீக்கடை வைத்து தருகிறார். அந்த நேரத்தில் அவரது மனைவிக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை வருகிறது.

பண நெருக்கடி, குடும்பம், வேலை என சிக்கல்கள் அடுக்க மீண்டும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றி. இதற்காக தன் நண்பர் முபாசிர் வீட்டிலேயே திருடவும் செய்கிறார்.. ஆனால் மறுநாள் முபாஷிர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்க, போலீசாரின் சந்தேகம் வெற்றி, கருணாகரன் பக்கம் திரும்புகிறது.

இப்படியாக தொடரும் சிக்கல்களை வெற்றி எப்படி சமாளிக்கிறார், தொடர்பியல் விதியின் பிடியில் இருந்து அவரால் மீள முடிந்ததா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
முதல் பாகம் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் இருக்கும். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் நாம் அதை எதிர்பார்க்க கூடாது. வெற்றி, கருணாகரன், ரோஹினி, மைம் கோபி ஆகியோர் முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நாசரின் தம்பி, பார்ப்பதற்கு நாசரையே ஞாபகப்படுத்துகிறார். பெரிதாக எதோ செய்யப்போகிறார் என நினைத்தால் சப்பென ஆக்கி விடுகிறார்.
படம் போரடிக்கவில்லை தான். ஆனால் தொடர்பியல் என்பது முதல் பாகத்தில் அதன் போக்கிலேயே போகும். அதைச்சுற்றி திரைக்கதை அமைத்தது போல இருக்கும்.

ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்பியலைக் காட்ட வேண்டும் என்பதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அலைய விட்டிருக்கிறார்கள். முதல் பாகம் போல இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.