நடிகர் துல்கர் சல்மான் நேரடியாக தெலுங்கில் இரண்டாவது முறையாக நடித்துள்ள சீதாராமம் என்கிற படம் கடந்த வாரம் தெலுங்கு மட்டுமல்லது தமிழிலும் வெளியானது. இந்த படத்தில் மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனு ராகவபுடி இயக்கிய இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
70களில் ராணுவ பின்னணியில் நடைபெறும் காதல் கதையாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் இன்னும் அதிக காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய துல்கர் சல்மான், ‘இயக்குனரிடம் கதை கேட்கும்போது கூட கடிதங்களின் பழக்கம் தற்போது பெரிய அளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார்கள்.
ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி அதனை புகைப்படமாக எடுத்து என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
சீதாரமம் ரிலீசுக்கு முன்னாடி இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே என தற்போது நினைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.