V4UMEDIA
HomeNewsKollywoodயுவன்-25 நிகழ்ச்சி ; அரங்கையே ஆடவிட்ட யுவனின் இசை

யுவன்-25 நிகழ்ச்சி ; அரங்கையே ஆடவிட்ட யுவனின் இசை

இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசனா லிட்டில் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் இசையமைப்பாளராக அடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக மாலிக் ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக மலேசியாவில் யுவன்-25 என்கிற பெயரில் மிகப்பெரிய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்ற இந்த லைவ் இன் கான்செர்ட்டின் முதல் நாள் நிகழ்ச்சி புக்கிட் ஜலிலில் உள்ள அக்சியதா அரேனா வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது. .

மாலை ஆறு மணிக்கு துவங்கிய முதல் நாள் நிகழ்ச்சியில் மலேசிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மலேசியன் இசைக்கலைஞர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் இருந்து கொண்டாட்டம் துவங்கியது. இதில் ஹேவக் பிரதர்ஸ், டார்க்கி, சந்தோஷ், யு நா ஹூ ஆகியோர் தங்களது பங்களிப்பை தந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மங்காத்தா தீம் மியூசிக் ஒலிக்க, ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்பு கொடுக்க, யுவன் சங்கர் ராஜாவின் மாஸ் என்ட்ரி நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை வேதிகா கலந்து கொண்டார். அவரை டத்தோ அப்துல் மாலிக் வரவேற்று மரியாதை செய்தார். மலாய் மொழியில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய வேதிகா நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து பார்த்து ரசித்தார்.

அதன்பிறகு மங்காத்தா பாடலுடன் தொடர்ந்த இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் தன்விஷா, சத்யபிரகாஷ், ஸ்ரீநிஷா ஜெயசீலன், பிரியங்கா, விஷ்ணு பிரியா ரவி, திவாகர், ராகுல் நம்பியார் விஜய் யேசுதாஸ், டிஜே, ஸ்வேதா பண்டிட், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.

முன்னணி நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடியது இதில் ஹைலைட்டாக அமைந்தது.

ஒவ்வொரு பாடகர்களும் யுவனின் மிகச்சிறந்த பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பிரபல பாடகர் ஜாவேத் அலி இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவுக்கு வருகை தந்திருந்தார். மேலும் யுவனுக்காக சில பாடல்களையும் அவர் மேடையில் பாடினார்..

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) இந்த நிகழ்ச்சியின் இடையே யுவன் வெர்சஸ் யுவன் ரசிகர்கள் என ஒரு செக்மென்ட் ஒன்றை நடத்தினார். அதில் யுவன் இசையில் வெளியான பாடல்களில் இருந்து ஏதோ ஒரு வரியை டிடி சொல்ல, அது என்ன பாடல் என்று யுவன் சங்கர் ராஜாவோ அல்லது அவர் ரசிகர்களோ யூகித்து பாட வேண்டும். இதில் யுவன் இரண்டு மூன்று பாடல்களை மட்டுமே சரியாக கண்டுபிடிக்க, அவரது ரசிகர்களும் மற்றும் பின்னணி பாடகர்களும் மற்ற பாடல்கள் அனைத்தையும் உடனுக்குடன் கண்டுபிடித்து பாடியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இதற்கு முன்னதாக 2012ல் மலேசியாவில் நடைபெற்ற யுவனின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் யுவனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக மலேசியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த இந்த முதல் நாள் நிகழ்ச்சி இரவு கிட்டத்தட்ட இரண்டு மணி வரை நீடித்து, எந்தவித தடங்கலும் இல்லாமல் உற்சாகம் குறையாமல் நடைபெற்று முடிந்தது

ரசிகர்கள் திரும்பத் திரும்ப யுவனிடம் ஒன்ஸ்மோர் கேட்க, இறுதியாக மாரி-2 படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ரவுடி பேபி பாடலை யுவன் சங்கர் ராஜா பாட ஆரம்பிக்க, அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக ஆட ஆரம்பிக்க, அனைத்து பாடகர்களும் யுவனுடன் சேர்ந்து இந்த பாடலை இணைந்து பாடி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்கள்.

யுவனின் இசையில் நெகிழ வைக்கும் பாடலாக வெளியான, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலை தனது மகளுக்கு அர்ப்பணிப்பு செய்வதாக கூறி யுவன் பாட ஆரம்பிக்க, ரசிகர்கள் ஒரு பக்கம் கரகோஷம் எழுப்ப, யுவனின் மகள் சியா தன் தந்தையை நோக்கி உற்சாகத்துடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் உலகம் முழுவதிலும் நிலைமை வேறு விதமாக மாறி, தற்போது தான் அதிலிருந்து அனைவரும் மீண்டு வருகிறார்கள். அதிலும் மலேசியாவில் இன்னும் அதன் தாக்கம் அகலாத நிலையில் நிறைய கட்டுப்பாடுகள் இப்போதும் கூட கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள மக்களை ரிலாக்ஸ் செய்யும் விதமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு உற்சாகமாக நிகழ்ச்சி நடந்ததில் மலேசிய ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Most Popular

Recent Comments