சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2005ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வசீகரித்த இந்த படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் கூட பலரும் மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு டிவி முன் அமர்ந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு காமெடி, ஹாரர் என கலந்து கட்டி கர்ஷியல் அம்சங்களுடன் இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பி.வாசு.

இந்த படத்தில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் வடிவேலுவின் நகைச்சுவையும் என எல்லாமாக சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக நின்றன. பாபா படத்தின் சரிவுக்கு பிறகு, தான் யானை அல்ல குதிரை என கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது சொன்னபடி சந்திரமுகி படத்தின் மூலம் தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த படம் இது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே சந்திரமுகி 2 படத்தின் கதை தயாராக இருக்கிறது என பி. வாசு கூறி வந்தார். அதனால் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்து வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் ராகவ லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை இயக்கப் போவதாக பி வாசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் வடிவேலுவும் இடம்பெருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மைசூரில் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பதற்கு கிளம்புவதற்கு முன்பாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் வீட்டிற்குச் சென்ற ராகவா லாரன்ஸ் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்று அதன் பிறகு மைசூருக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் அவர் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக நேரில் வந்து ஆசி பெற்று சென்றது திரையுலகில் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களையும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.















