V4UMEDIA
HomeNewsKollywoodஇத்தனை படங்களில் சரத்குமார் நடிக்கிறாரா ? பிறந்தநாளில் வெளியான ஆச்சரியங்கள்

இத்தனை படங்களில் சரத்குமார் நடிக்கிறாரா ? பிறந்தநாளில் வெளியான ஆச்சரியங்கள்

90களில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக புரமோஷன் பெற்றவர் நடிகர் சரத்குமார். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கதாநாயகனாகவே நடித்து வந்த சரத்குமார் சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக மாறி முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இடம் பெற்று வருகிறார்.

இடையில் ஏற்பட்ட சிறிய தொய்வுக்கு பிறகு தற்போது பிசியான நடிகராக மாறியுள்ள சரத்குமார் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் இருக்கின்றன என்பது அவரது பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி அந்தந்த படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சரத்குமார். இதற்கு முன்னதாக தான் இயக்கிய காஞ்சனா படத்தில் சரத்குமாரை திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அந்த படத்திற்கு, அந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும் சரத்குமாருக்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று தந்தவர் லாரன்ஸ் தான்.

அதேபோல விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகிறார்.

இது தவிர அவரது 150-வது படமாக தி ஸ்மைல் மேன் என்கிற படம் உருவாக இருப்பதாக அதன் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதுதவிர மலையாள இயக்குனர் மாதவ் ராம்தாஸ் என்பவர் இயக்கும் படத்தில் சரத்குமார் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த படத்திற்கு ஆழி என டைட்டில் வைக்கப்பட்டு அதன் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

இதுதவிர பரம்பொருள் என்கிற படத்தில் சரத்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்சங்கர்ராஜா 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சரத்குமாருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்..

Most Popular

Recent Comments