நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் நந்தா. இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் அடுத்து உருவான பிதாமகன் படத்திலும் நடித்த சூர்யா மிகச்சிறந்த நடிகராக உருமாறி இன்று முன்னணி நடிகராக வலம் வருவதற்கு அஸ்திவாரம் போட்டவர் இயக்குனர் பாலா.
இந்தநிலையில் கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து இவர்கள் இருவரும் தற்போது புதிய படத்தில் இணைந்து பணியாற்றி வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றது.
இடையில் இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் படப்பிடிப்பின்போது உரசல் என்று கூட ஒரு செய்தி வந்தது. ஆனால் அதை பின்னர் சூர்யா மறுத்து அதற்கு. முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு வணங்கான் என டைட்டில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள சூர்யா, உங்களுடன் இணைந்ததில் பெருமகிழ்ச்சி.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா” என்று இயக்குனர் பாலாவுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.