சில வருடங்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள் வெளியானதுமே அடுத்த சில நாட்களில் அந்த படத்தின் திருட்டு விசிடி மார்க்கெட்டில் வெளியாகி படத்தின் வியாபாரத்தை சீர்குலைத்து வந்தது. அதை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகள் மேற்கொண்டும் முடியாமல் கால ஓட்டத்தில், தானாகவே வீசிடி முறை காணாமல் போய்விட்டது.. ஆனால் அதை தொடர்ந்து படம் வெளியான அன்றே ஆன்லைனில் திருட்டுத்தனமாக படத்தை பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற கும்பல்கள் முளைத்தன.
நடிகர் சங்க செயலாளர் பொறுப்பேற்றதும் நடிகர் விஷால் இந்த கும்பலை கண்டுபிடித்து சட்டத்தின் மூலம் நிறுத்தவேன் என சவால் விட்டு தேடிப்பார்த்தார் ஆனால் ரிசல்ட் என்னவோ பூஜ்யம் தான். இந்த நிலையில் அருண்விஜய் இந்த கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் நிஜத்தில் அல்ல.. நிழலில்..
ஆம்.. தமிழ் ராக்கர்ஸ் என்கிற பெயரில் உருவாகியுள்ள வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அருண்விஜய் இப்படி படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக அவற்றை ஆன்லைனில் பதிவேற்றும் கும்பலை தேடி கண்டுபிடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 3ஆம் தேதி இந்த வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது. இதில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார்.