இயக்குனர் சிகரம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லனாக பல வருடங்கள் ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் நாசர். கடந்த 20 வருடங்களாக குணச்சித்திர நடிகராக மாறி, சமையலுக்கு எப்படி கருவேப்பிலை தவிர்க்க முடியாததோ அதுபோல தமிழ் சினிமாவிற்கு நாசர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்பது போல சினிமா உடன் பின்னிப்பிணைந்து விட்டார்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் அதே போன்ற ஒரு தனித்துவமான இடம் நாசருக்கு உண்டு. முன்னணி நடிகர்கள் படங்களில் தவறாமல் இடம் பெறும் நாசர், அறிமுக நட்சத்திரங்கள், அறிமுக இயக்குனர்களின் படங்களிலும் பாகுபாடு இன்றி நடித்து அவர்களை ஊக்கப்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் ஒரு பக்கம் நடிகர் சங்க தலைவர் என்கிற பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு நடிப்பையும் இன்னொரு பக்கம் அழகாக கவனித்து வருகிறார் நாசர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நாசர் சினிமாவிலிருந்து விலகப்போகிறார், ஓய்வு எடுக்க போகிறார் என்பது போன்று கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி உலவி கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று கூறி வதந்தி பரப்பியவர்களின் முகத்தில் கரியை பூசி உள்ளார் நாசர்.