இயக்குனர் கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டன. அதனால் இந்த வெற்றிக்கூட்டணி வெந்து தணிந்தது காடு என்கிற படத்தின் மூலம் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்க காயாடு லோஹர் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லனாக மலையாள நடிகர் நீரஜ் மாதவ் என்பவர் நடித்துள்ளார்

பொதுவாக முன்பெல்லாம் சிம்பு நடிக்கும் படங்கள் என்றாலே அதன் படப்பிடிப்பு ஏதோ ஒரு விதத்தில் தாமதமாவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக சிம்பு நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சரியான நேரத்தில் நடைபெற்று வருவது மிகப்பெரிய மாற்றம். அந்த வகையில் கவுதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலகட்டத்திலேயே நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படத்தை தயாரித்து வரும் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வருட துவக்கத்தில் வெளியான ஈஸ்வரன், கடந்த வருட இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாநாடு, இந்த செப்டம்பரில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு என சிம்புவின் திரைப்படங்கள் சீரான இடைவெளியில் வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.