ஒரு பக்கம் நகைச்சுவை நடிகர், இன்னொரு பக்கம் கதையின் நாயகன் என வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் நடிகர் யோகிபாபு. அதனால் இவரது வண்டி தடுமாறாமல் ஸ்டெடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தன்னை வைத்து வித்தியாசமான புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் யோகிபாபு.

அந்த வகையில் ஏற்கனவே தாதா 87 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ என்பவர் தற்போது மோகனை வைத்து இயக்கி வரும் ஹரா என்கிற படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் யோகிபாபு.

இந்த படத்தில் மோகனுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் யோகிபாபு, இந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் தனது ட்ரேட்மார்க் காமெடியை பக்காவாக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

எண்பதுகளில் சில்வர் ஜூபிளி ஹீரோவாக வலம் வந்த நடிகர் மோகன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாகவே களமிறங்கி தனது இடத்தை பிடிப்பதற்கு இந்த ஹரா திரைப்படம் வழிவகை செய்யுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.