V4UMEDIA
HomeNewsKollywoodஇளம் விஞ்ஞானிகளைக் கௌரவித்த 'ஆஹா' டிஜிட்டல் தளம்

இளம் விஞ்ஞானிகளைக் கௌரவித்த ‘ஆஹா’ டிஜிட்டல் தளம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஐங்கரன்’ திரைப்படம், கடந்த வாரம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவான இந்தப்படத்தின் கதை, திரைக்கதை புதுமையாகவும், சுவராசியமாகவும் இருந்ததால், ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக இளம் விஞ்ஞானியை மையப்படுத்தி உருவாகி வெற்றி பெற்ற இந்த படத்தின் கதையை போன்று தமிழகத்தில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து, நேரில் வரவழைத்து, ஐங்கரன் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்ட ஆஹா டிஜிட்டல் குழுமம் பாராட்டி, பரிசளித்து கௌரவித்துள்ளது. இவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள ரமடா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், உலகளாவிய இளைஞர்களின் கனவு நாயகனான அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், ” இந்தப்படத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இயக்குநர் ரவி அரசு திரைக்கதை எழுதி இருந்தார். அதில் திரைப்படத்திற்கான வணிக ரீதியிலான சில விசயங்களை இணைத்திருந்தோம் இங்கே குழுமியிருக்கும் ஏராளமான இளம் விஞ்ஞானிகளை காணும்பொழுது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறேன். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைத்து, தங்களது கண்டுபிடிப்புகளை கண்டறிந்திருக்கிறார்கள். இதுபோன்ற இளம் விஞ்ஞானிகளின் கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். என்னுடைய திரையுலக பயணத்தில் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ‘ஐங்கரன்’ படத்தில் இளம் விஞ்ஞானியாக நடித்தது மறக்க இயலாது” என கூறினார்.

மேலும் இந்த விழாவிற்கு வருகை தந்த முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பிரத்யேகமான பரிசளித்து கௌரவித்தார்.

Most Popular

Recent Comments