எமன், சைத்தான், கொலைகாரன் என டைட்டிலிலேயே மிரள விடும் விஜய் ஆண்டனி இப்போதெல்லாம் தமிழரசன், அக்னிசிறகுகள், மழை பிடிக்காத மனிதன் என ரொம்பவே சாப்ட்டான டைட்டில்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அப்படி ஒரு படம்தான் வள்ளிமயில்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய வள்ளிமயில் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது இந்தப் படத்தின் கதையை உருவாக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டதாக கூறினார்.
ஏற்கனவே பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்கிற நாவலை அதேபெயரில் சுசீந்திரன் படமாக இயக்கிபோது அதில் நடித்த அப்புக்குட்டிக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படமும் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வெற்றிபெற்ற படமே.
அதனால் மீண்டும் எழுத்தாளர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் புது வாழ்வு கிடைக்கும் விதமாக இந்த வள்ளிமயில் படத்தின் வெற்றி அமைந்தால் மிக சிறப்பானதாக இருக்கும்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடியாக பரியா அப்துல்லா என்பவர் நடித்துள்ளார். மேலும் அகத்தியன் மகளும் இயக்குனர் திருவின் மனைவியுமான கனி மற்றும் மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமாயி ஆகியரை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் சுசீந்திரன்.
அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமான் இந்த படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.