பொதுவாக மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து தியேட்டர்களுக்கு வரவழைப்பதற்காக விதவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். வழக்கமான இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர் சந்திப்பு இவை தவிர்த்து வேறு வித்தியாசமான புதுவிதமான புரமோஷன்களை செய்தால்தான் படம் பற்றி ரசிகர்கள் பேசவைத்து திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும் என ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் படத்திற்காக மெனக்கெடுவது உண்டு.
நடிகர் பார்த்திபன் தனது படத்தின் ரிலீஸின் போதெல்லாம் இதுபோன்று ஏதாவது புதுமையாக செய்யக்கூடியவர். இந்த நிலையில் அவரையும் தாண்டி இதுவரை புரமோஷனுக்காக யாருமே செய்யாத ஒரு வித்தியாசமான காரியம் ஒன்றை செய்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி.
ஆர்ஜே பாலாஜியும் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணும் விதமாக ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி இருவரும் ஜி தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் என்கிற சீரியலில் சில காட்சிகளில் நடித்துள்ளனர்.
அந்த சீரியலில் கதையின் நாயகியாக டாக்டர் கதாபாத்திரத்தில் தேவயானி நடித்து வருகிறார் அவருடன் இவர்கள் இருவரும் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளனர்.
அவை வரும் நாட்களில் அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களையும் வீட்ல விசேஷம் படம் பற்றி பேச வைத்து தியேட்டருக்கு அழைத்து வரும் புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
ஏற்கனவே அவர் மூக்குத்தி அம்மன் படம் மூலமாக குடும்ப ஆடியன்சை கைப்பற்றி வைத்துள்ளார். இந்தப்படமும் குடும்பப்பாங்காக உருவாகி உள்ளதால் நிச்சயமாக முந்தைய படத்தை போல இதற்கும் வரவேற்பு குறைவில்லாமல் கிடைக்கும் என நம்பலாம்.