சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம் வெளியானது. படத்தில் இத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் முன்னணி ஹீரோயின்கள் என யாருமே படத்தில் இடம் பெறவில்லை. காரணம் படத்தின் கதை அப்படி.
இருந்தாலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி என சினிமாவுக்குள் இப்போதுதான் நுழைந்துள்ள சின்னத்திரை நடிகைகள் நடித்திருந்தனர். காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக கூட மிகப் பெரிய அளவில் அறிமுகமில்லாத நடிகை ஸ்வாதிஷ்தா என்பவர் தான் நடித்துள்ளார்.. கமலுக்கு ஜோடியே இல்லை.
பஹத் பாசில் ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி நடித்திருந்தது தான் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். விஜய்சேதுபதியின் ஆஸ்தான நடிகையாக தொடர்ந்து அவரது படங்களில் இடம்பெற்று வந்த காயத்ரி இன்னும் பெரிய அளவிற்கு ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார். அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக இவ்வளவு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படத்தில் கதாநாயகி அந்தஸ்து காயத்ரிக்கு கிடைத்திருப்பதன் மூலம் அவர் மீண்டும் வெளிச்சம் வளையத்திற்குள் வந்துள்ளார் என்று சொல்லலாம்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு முன்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி என மூவருமே நடித்திருந்தனர். அதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த காயத்ரி பஹத் பாசிலை சந்திப்பது போல ஒரு காட்சி கூட இல்லை. அதே சமயம் இந்தப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ள காயத்ரி ஒரே ஒரு காட்சியில் மட்டும் விஜய்சேதுபதியை சந்திப்பது போல காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அவருக்கு கமலுடன் இணைந்து நடிக்கும் ஒரு காட்சி கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது