வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிப்பதுடன் திறமையான இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் தயாரிப்பாளர் சி.வி குமாருக்கும் மிகமுக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தற்போது அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் டைட்டானிக்.
இந்த படத்தை எம்.ஜானகிராமன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் சுதா கொங்கரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க, கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி, ஜாங்கிரி மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி மோகன், நடிகை காயத்ரியும் கூட சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சேதுபதி, தெகிடி படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படம் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.
இந்த படம் பற்றி படக்குழுவினர் கூறும்போது இப்படம் முழுநீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தின் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்க வைக்கும். அதுவும், க்ளைமாக்சில் வரும் சில திருப்புமுனைகள் இதுவரை ரொமாண்டிக் காமெடி படங்களில் வராத அளவிற்கு இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திரைக்கதை அமைந்திருப்பது இப்படத்தின் பெரிய பலம்” என்கிறனர்.