சாக்லேட் ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூர்யாவை, அவருக்குள் இருந்த நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக, தான் இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்து அவரது திரையுலக பயணத்தில் புதிய பாதையை போட்டுக் கொடுத்தவர் இயக்குனர் பாலா.
சூர்யாவுக்கு மட்டுமல்ல விக்ரம், அதர்வா, ஆர்யா என பலரும் இவரது படங்களில் நடித்த பின்பு தான், திரையுலகில் தங்களுக்கான ஒரு ஸ்திரமான இடத்தை பிடிக்க ஆரம்பித்தனர். அந்தவகையில் சூர்யா தற்போது மிகப்பெரிய முன்னணி நடிகராக மாறி விட்டார் என்றாலும் மீண்டும் பாலாவுடன் இணைந்து பணியாற்ற எப்போதுமே தயாராக இருந்தார்.
பாலாவிற்கும் கடந்த சில வருடங்களாகவே சோதனையான காலகட்டம் என்பதால் இதிலிருந்து அவர் மீண்டு வருவதற்காக கைகொடுக்கும் விதமாக பாலாவின் டைரக்ஷனில் தற்போது ஒரு படத்தில் சூர்யா நடித்து வந்தார்.
கன்னியாகுமரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்றும் அதனால் படப்பிடிப்பிலிருந்து சூர்யா கோபித்துக்கொண்டு கிளம்பி சென்னை வந்து விட்டார் என்றும் இந்த படம் இனிமேல் கைவிடப்படும் என்றும் விதவிதமான செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன.
இதுகுறித்து சூர்யா மற்றும் பாலா தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வெளியாகவில்லை. அதனால் இப்படி வெளியான செய்திகள் உண்மைதானோ என்கிற தோற்றம் ரசிகர்களிடம் ஏற்பட்டது. ஆனால் தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யாவிடம் இருந்து தரமான பதிலடி ஒன்று வெளியாகி உள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் செட்டுக்கு போக காத்திருக்கிறேன் சூர்யா 41” என குறிப்பிட்டுள்ளார் சூர்யா. சூர்யாவின் 41வது படத்தை பாலா தான் இயக்கி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடோ அல்லது மனஸ்தாபமோ இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார் நடிகர் சூர்யா.