ரீமேக் கிங் என பெயர் பெற்ற இயக்குனர் ஆர்.கண்ணன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீமேக் செய்துள்ள படம் தி கிரேட் இண்டியன் கிச்சன்.
இந்த படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.
படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால் தமிழிலும் ஆங்கிலத்திலேயே அப்படியே வைத்து விட்டார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கதாநாயகனாக ராகுல் ரவீந்திரன் என்பவர் நடித்துள்ளார்.
இந்தப்படம் குடும்பப்பெண்கள் எப்படி சமையல், வீட்டு வேலை, துணி துவைப்பது, கணவனை கவனிப்பது என எந்தவித சுதந்திரமும் இன்றி அதேசமயம் நாகரீக அடிமைகளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு தமிழிலும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தநிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குடும்பப்பாங்கான படத்திற்கு எதற்காக யு சான்றிதழ் வழங்காமல் இப்படி யு/ஏ வழங்கியுள்ளார்கள் என்கிற ஒரு சந்தேகம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்படலாம். அதற்கு காரணம் இருக்கிறது.
படத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வெறும் சில வினாடிகளில் வந்துசெல்லும் விதமாக தாம்பத்திய காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால் அதற்காக யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது இருந்தாலும் குடும்பத்துடன் பார்த்து மகிழ உத்தரவாதம் கொடுக்கும் படம்தான் இந்த தி கிரேட் இந்தியன் கிச்சன்